அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...........


இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது அன்பு மழை பொழிந்த மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.

1889
நவம்பர் 14ல் மோதிலால் நேரு மற்றும் சொரூபராணிக்கு மகனாக நேரு பிறந்தார்.

தீன் மூர்த்தி பவனில் தோட்டத்தில் நேரு உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு அந்த குழந்தை இருக்கும் இடத்துக்கு அவர் சென்றார். பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையின் தாய் அருகில் இருக்கிறாரா என்பதை அவர் பார்த்தார். இல்லை. அனேகமாக தோட்டவேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். குழந்தை அழுது கொண்டேயிருந்தது. அழுகையை நிறுத்த அவருக்கு வேறு வழியில்லை. உடனே குழந்தையின் அருகே சென்று தூக்கி, இரு கைகளிலும் வைத்து தாலாட்டினார். குழந்தை அழுகையை நிறுத்தியது. வந்து பார்த்த குழந்தையின் தாய்க்கு ஆச்சரியம். நம் குழந்தையா நேருவின் கைகளில் தவழ்கிறது என்று. இயல்பாகவே நேரு குழந்தைகள் மீது அளவற்ற அன்பு காண்பித்தார்.



ஒரு குழந்தை அவருடைய சட்டையில் ரோஜா அணிவித்ததிலிருந்து எப்போதுமே தனது மேல் அங்கியில் ரோஜா அணிவதை வழக்கமாக கொண்டார்.

குழந்தைகள் பூந்தோட்டத்தில் உள்ள மொட்டுகள் என்று அவர் வர்ணித்தார். நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது என்று அவர் அடிக்கடி கூறுவார். குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலை அமைய வேண்டும் என்று விரும்பினார். குழந்தைகள் அவரை நேரு மாமா என்றே அழைத்தார்கள்.

குழந்தைகளிடம் ஆண் மற்றும் பெண் என்ற பேதம் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

நேரு மிகச்சிறந்த பேச்சாளர், தி டிஸ்கவரி ஆப் இந்தியா மற்றும் ஆட்டோபயாகிராபி எனும் அவரது புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை.

அவர் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில்...

குழந்தைகளுடன் இருப்பதை நான் விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். ஏன்... விளையாடவும் விரும்புகிறேன். அப்படி விளையாடும் போது, நான் வயதானவன் என்பதை மறந்துவிடுகிறேன். குழந்தைப் பருவம் மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதையும் மறந்து விடுகிறேன். ஆனால் நான் எழுத உட்காரும் போது, என் வயதும் தூரமும் குழந்தைகளாகிய உங்களிடமிருந்து என்னை பிரித்து விடுகின்றன. வயதானவர்கள் இளையோருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்... என்று எழுதியிருந்தார். 

Post a Comment

0 Comments